நாமக்கல், ஜன. 29-
நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரி, கல்வியியல் கல்லுாரி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப, உரிய கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தி, அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை தேர்ந்தெடுத்து அரசுக்கு அனுப்பி வைக்கிறது.
அதனடிப்படையில், உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை அவர்களை பணியமர்த்தி வருகிறது. இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின், 2023ம் ஆண்டு திட்டத்தில், நடப்பு ஜன., இறுதியில், அரசு கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில், காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும், அதற்கான எழுத்து தேர்வு, வரும் ஏப்ரல் மாதம் நடப்பதாக அறவிப்பை வெளியிட்டுள்ளதையும் வரவேற்கிறோம்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில், முதுநிலை பட்டப்படிப்புடன், உதவி பேராசிரியர் ஆவதற்கு மத்திய அரசால் நடத்தப்படும் (நெட்) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மாநில அரசால் நடத்தப்படும் தகுதி தேர்வில் (செட்) தேர்ச்சி பெற்றவர்கள், முதுகலை ஆசிரியர்களாக, ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும், கற்றல் கற்பித்தலில், ஐந்து முதல், 15 ஆண்டுகள் வரை மிகுந்த அனுபவம் பெற்றவர்களாக உள்ளனர். தற்போது பள்ளிக்கல்வித் துறையில், 30 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறையில், தொடக்கநிலை பணியாக இருக்கும் இளநிலை உதவியாளருக்கு, மிக உயர்ந்த நிலை பணியாக இருக்கக்கூடிய முதுகலை ஆசிரியர் பணியிடம் நேரடியாக பதவி உயர்வாக வழங்கப்படுகிறது. அதுபோல், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் என்ற ஒரு பதவி உயர்வு மட்டுமே பெற்று பணி ஓய்வு பெறும் பெரும்பாலான முதுகலை ஆசிரியர்களுக்கு, கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கான பணி நியமனத்தில், 50 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி, பதவி உயர்வு வழங்கி, சமூக நீதியை தமிழக அரசு நிலைநாட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.