பள்ளபாளையத்தில் குப்பைத்தொட்டி அருகே கிடந்த, 'ஏர் கன்' குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம்,45. பள்ளபாளையம் பேரூராட்சியில் துாய்மை பணியாளர் கடந்த, 21ம் தேதி தனியார் மில் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் இருக்கும் குப்பையை, அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, குப்பைத்தொட்டி அருகே கிடந்த ஒரு பெட்டியில் துப்பாக்கி இருந்துள்ளது. அது குறித்து யாருக்கும் தெரிவிக்காமல், வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார்.
சில நாட்களுக்கு பிறகு, துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்தால் பிரச்னையாகி விடும் என பயந்த அவர், நேற்று முன் தினம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
போலீசார் நடத்திய ஆய்வில், அது 'ஏர் கன்' என்பதும், பலூன்களை சுட பயன்படுத்தும் பொம்மை துப்பாக்கி என்பதும் தெரிந்தது.
இது குறித்து, சுப்பிரமணியத்திடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.