''பல்கலைகளின் தன்னாட்சி அதிகாரம் என்பது இரு வழிப் பாதையாக இருக்க வேண்டும்,'' என, நிதி அமைச்சர் தியாகராஜன் கூறினார்.
'சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தில் ஒருமித்த கருத்தும், சர்ச்சைகளும்' என்ற தலைப்பில், சென்னை பல்கலை வளாகத்தில் நேற்று முன்தினம் கருத்தரங்கு நடந்தது. அதில், நிதி அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:
பல்கலைகளை அதன் மோசமான நிலையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதை பற்றி, நான் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. ஒரு நிறுவனம் எப்படி இயங்க வேண்டும்; அதன் கட்டமைப்பு, நிர்வாகம், பொறுப்புடைமை குறித்து, நான் விரிவாக படித்திருக்கிறேன்.
பல்கலைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் தன்னாட்சி அதிகாரம் குறித்து, நான் மிகவும் கவலைப்படுகிறேன். தன்னாட்சி என்பது ஒரு வழிப்பாதை.
பணி நியமனம், ஊதியம் வழங்குதல், நிதி செலவீனம் மற்றும் நிர்வாகம் தொடர்பாக தாங்களே முடிவு எடுத்து, நிறுவனத்தை நடத்துகின்றனர்.
ஆனால், ஒரு கட்டத்தில் திடீரென நிதி பற்றாக்குறை வந்து விட்டது என்று கூறி, அரசிடம் வந்து நிதி கேட்கின்றனர். அதன்பின், அரசுதான் அந்த நிறுவனங்களுக்கு நிதி அளித்து காப்பாற்ற வேண்டியுள்ளது.
நான் தன்னாட்சி அதிகாரத்துக்கு ஆதரவாக இருக்கிறேன். ஆனால், அது இரு வழிப்பாதையாக இருக்க வேண்டும் என, நினைக்கிறேன். பல்கலைகளாக இருந்தாலும், மின் துறை, பால் நிறுவனம் என, பொது துறை நிறுவனமாக இருந்தாலும், நீங்களே சுதந்திரமான முடிவெடுத்து, நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் நடத்துகிறீர்கள் என்றால், அதில் எந்த பிரச்னையும் இல்லை. அரசு உங்கள் நிர்வாகத்தில் தலையிடாது.
ஆனால், நிறுவனத்தை சரியாக நடத்தாமல், எங்களை மீட்டெடுங்கள் என்று அரசிடம் வந்து நின்றால், அரசு தரப்பில் நிதி வழங்க, பல்வேறு வகை கேள்விகளை உங்களிடம் கேட்போம். அதற்கு சரியான பதில் உங்களிடம் இருக்க வேண்டும்.
உங்களின் நிர்வாகம், நீங்கள் எடுத்த முடிவுகள் மற்றும் பொறுப்புணர்வு குறித்து, அரசு ஆய்வு செய்யும். இதை மனதில் வைத்து கொள்ளுங்கள். சென்னை பல்கலையில் அதுபோன்ற நிலை ஏற்பட்டு, ஒரு முறை உதவி என கேட்கப்பட்டு, கடந்த ஆண்டு அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்பேசினார்.