ஊட்டியில் வக்கீல்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டியில், ரூ.37 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், நேற்று முன்தினம் முதல் செயல்பட துவங்கியுள்ளது.
ஆனால், கோர்ட் கட்டடங்கள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்றும், அடிப்படை வசதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறி, பெரும்பாலான வக்கீல்கள், கடந்த மூன்று நாட்களாக, கோர்ட்டுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, பழைய கோர்ட் முன்பாக, வக்கீல்கள், வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் சங்க தலைவர் சந்திரபோஸ், நிருபர்களிடம் கூறுகையில், ''புதிய கோர்ட்டில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. கோர்ட் நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. வசதிகள் செய்து தர கோரி, போராட்டம் நடத்தி வருகிறோம். சென்னையில் ஐகோர்ட் தலைமை நீதிபதியை சந்தித்து, எங்களது கோரிக்கையை தெரிவிக்க அனுமதி கேட்டுள்ளோம். அவரை சந்திக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்,'' என்றார்.