அன்னுார் மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
கோவை மாவட்டம், அன்னுார் அடுத்த மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில், 'மேலத்திருப்பதி' என்று அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில்,ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி திருவிழாவில் பல லட்சம் பேர் பங்கேற்பர்.
நேற்று முன்தினம் இரவு நகர சோதனை மற்றும் வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று காலை, பெருமாள் உட்பட உற்சவர்களுக்கு காப்புகட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து,கருடாழ்வாருக்கு திருமஞ்சனம் நடந்தது.
காலை 8:15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. 'கோவிந்தா, கோவிந்தா' என பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். வெங்கடேச பெருமாளுக்கு மகா தீபாராதனை நடந்தது.
வரும் 31ம் தேதி வரை தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா, பிப்., 1ம் தேதி காலை 10:00 மணிக்கு, அம்மன் அழைத்தல், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 2ம் தேதி இரவு யானை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை 5:30 மணிக்கு வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.