உடுமலை:உடுமலை நகரிலுள்ள பிரதான ரோடுகள் குறுகியதாகவும், குண்டும், குழியுமாகவும் உள்ளதால், வாகன நெரிசல் மற்றும் விபத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பிரதான ரோடுகள், ரோடு சந்திப்புகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களை, ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், விதி மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகின்றன.
பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொள்ளாச்சி ரோட்டில் இரு புறமும், அதிகளவு பிளக்ஸ் பேனர்கள் உரிய பாதுகாப்பு இல்லாமல், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினரால் வைக்கப்படுகிறது. மக்கள் அதிகளவு கூடும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள இவை, பலத்த காற்றுக்கு தாங்காமல் விழும் அபாயத்தில் உள்ளது.
அதே போல், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் குறுகலாக உள்ள, திருப்பூர் ரோடு சந்திப்பு, தளி ரோடு சந்திப்பு, தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் என நகரின் பிரதான இடங்களில் விதி முறை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகிறது.
வாகன ஓட்டுனர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், ரோடு சந்திப்புகளை ஆக்கிரமித்தும், பஸ் ஸ்டாப்களில் மக்கள் காத்திருக்கும் நிழற்கூரைகளை ஆக்கிரமித்தும் வைக்கப்படுகிறது.
ரோடுகளை மறித்தும், மறைத்தும் வைக்கப்படுவதால், வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. பிளக்ஸ் பேனர்கள் வைப்பது குறித்து ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன.
பிளக்ஸ் பேனர்கள் வைப்பது குறித்து உயர் நீதிமன்ற உத்தரவுகள், அரசு உத்தரவுகள் நடைமுறையில் இருந்தும், நகராட்சி அதிகாரிகள், போலீசார் அலட்சியம் காரணமாக, பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.