பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், தேர்நிலையம் மார்க்கெட்டிலுள்ள பழைய கட்டடங்களை இடித்து, 1.48 கோடி ரூபாய் செலவில், புதிதாக கட்டப்படுகிறது.
பொள்ளாச்சியில், காந்தி மார்க்கெட், திரு.வி.க., மார்க்கெட், தேர்நிலையம் மார்க்கெட் என, மூன்று பகுதிகளில், காய்கறிகள் ஏலம் விடப்படுகிறது. மார்க்கெட்டில் சில்லரை காய்கறி விற்பனை கடைகளும் செயல்படுகின்றன.
இதில், உடுமலை ரோட்டில் உள்ள தேர்நிலையம் மார்க்கெட் பழமையானது. கோட்டூர் ரோடு, உடுமலை ரோடு, பல்லடம் ரோடு வழித்தடத்திலுள்ள விவசாயிகள், விளைவித்த காய்கறியை தேர்நிலையம் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில், கடைவீதி அருகே தேர் நிலை மார்க்கெட் உள்ளதால், சில்லரை காய்கறி வர்த்தக கடைகள் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில், உடுமலை ரோடு விரிவாக்கத்தின் போது, ரோடு மார்க்கமாக இருந்த எட்டு கடைகள் இடித்து அகற்றப்பட்டன.
மீதமிருந்த கடைகள் சேதமடைந்து இருந்ததாலும், மார்க்கெட்டினுள் வியாபாரிகளே அமைத்திருந்த 'ெஷட்' சேதமடைந்தும் இருந்தது. மழை காலத்தில் மார்க்கெட்டினுள் தண்ணீர் தேங்குவது வாடிக்கையானது.
இந்நிலையில், மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக, தேர்நிலையம் மார்க்கெட் வியாபாரிகளுடன் நகராட்சி நிர்வாகம் பேச்சு நடத்தியது.
அப்போது, தெப்பக்குளம் அருகிலுள்ள காலி இடத்தில், தேர்நிலையம் மார்க்கெட்டுக்கு தற்காலிகமாக இடம் ஒதுக்கப்படும்.
மார்க்கெட் கடைகளை காலி செய்ததும், 1.48 கோடி ரூபாயில், 48 கடைகளுடன் புதிதாக கட்டடம் கட்டப்படும். அதன்பின், வியாபாரிகள் ஏலத்தில் கடைகளை எடுத்துக்கொள்ளலாம், என, நகராட்சி தலைவர் சியாமளா உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து, தேர்நிலையம் மார்க்கெட்டிலுள்ள கடைகளை வியாபாரிகள் காலி செய்ய துவங்கியுள்ளனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'நகராட்சி அளித்துள்ள உறுதியின் அடிப்படையில் கடைகளை காலி செய்கிறோம். புதிதாக கட்டடம் கட்டி முடித்ததும், தற்போதுள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து கடைகள் ஒதுக்க வேண்டும்,' என்றனர்.