உடுமலை:உடுமலை காந்திநகரில் நாமத்வார் பிரார்த்தனை மையம் அமைந்துள்ளது.
இம்மையத்தில், அவ்வப்போது சிறப்பு சொற்பொழிவுகள் நடந்து வருகின்றன. நேற்று சிறப்பு கூட்டு பிரார்த்தனை மற்றும் சத்சங்கம் நடந்தது.
மஹாராண்யம் முரளீதர சுவாமியின் அந்தரங்கச்செயலாளர் பாக்கியநாதன் சிறப்பு சத்சங்கம் நடத்தினார். அவர் பேசியதாவது: பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையானது இன்பத்தையே குறிக்கோளாகக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த மகிழ்ச்சி எங்கு கிடைக்கிறது என்பதை சத்சங்கமும் குருநாதரும் வழிகாட்டுகின்றனர். கலியுகத்தில் வரும் சிரமங்கள் அனைத்திலும் விடுபட, 'ஹரே ராம மஹாமந்திரம்' ஒன்றே மிக எளிமையான வழியாகும்.
இந்த நாமத்தை சொல்ல எந்தவித நியதிகளும் இல்லை.
மனிதர்களுக்கு இறைவனின் படைப்புகள் வேண்டுமா? படைத்தவன் வேண்டுமா என்றால், படைப்புகளை விட படைத்தவன் திருவடிகளை பற்றிக்கொள்வது ஒன்றே சாலச்சிறந்ததாகும்.
இவ்வாறு, பேசினார்.
சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. இந்நிகழ்ச்சியில், நகரப்பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.