பொள்ளாச்சி:ரேஷன் கடையில், பாமாயிலுக்கு பதில், தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ஜ., கோவை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், கிணத்துக்கடவு, பி.ஆர்.எஸ்., மஹாலில் நேற்று நடந்தது. மாநில துணை தலைவர், திருப்பதி நாராயணன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மணி, தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
வால்பாறை தோட்ட தொழிலாளர்களுக்கு, அரசு அறிவித்த சம்பளம் வழங்க வேண்டும்.
மதுக்கரை மலைச்சுவாமி கோவிலில் பாறைகள் உடைக்கப்படுவதால், அப்பகுதி மக்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. அங்கு பாறை உடைப்பதை உடனடியாக தடுக்க வேண்டும்.
2018ம் ஆண்டு பசுமை தீர்ப்பாய உத்தரவை பின்பற்றி, வெள்ளலுாரில் இயங்கும், கோவை மாநகராட்சி குப்பை கிடங்கை அகற்ற வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சியில், 40 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள, வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொள்ளாச்சி புறவழிச்சாலை அமைக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி பகுதிகளில், கனிம வளங்கள் சுரண்டப்பட்டு வெளி மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடண்டாமுத்துார் சட்டசபை ஆலாந்துறையில், காருண்யா நகரின் பெயரை, கிராம ஆவணங்களில் இருப்பதை போல், நல்லுார் வயல் என, பெயர் மாற்ற வேண்டும்.
ஆலாந்துறை வரை, செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை, ஈஷா யோகா மையம் வரை விரிவுபடுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில், நொய்யல் படித்துறைக்கு வரும், பக்தர்கள் வசதிக்காக, சேதமடைந்துள்ள படித்துறையை சீரமைக்க வேண்டும்.
வால்பாறையில் தீ விபத்தில், வீடுகளை இழந்த, ஏழு தொழிலாளர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
கொப்பரைக்கு மத்திய அரசு அறிவித்துள்ள, குறைந்தபட்ச ஆதார விலையுடன், மாநில அரசும் மானியம் வழங்கி, தேங்காய் விலை சரிவை தடுக்க வேண்டும். ரேஷன் கடையில், பாமாயிலுக்கு பதில், தேங்காய் எண்ணெய் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், காசி தமிழ்ச்சங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கும், பட்டதாரிகளுக்கு வேலை வாயப்புக்களை உருவாக்கியதற்கும், ஜி20 மாநாட்டின் ஒரு அமர்வை, கோவையில் நடத்தியதற்கும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.