ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
பொள்ளாச்சி, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், எஸ்.ஐ., கலைச்செல்வன் தலைமையிலான போலீசார், அம்பராம்பாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நஞ்சேகவுண்டன்புதுார், மாரியம்மன் கோவில் அருகே, கேரள பதிவு எண் கொண்ட, சரக்கு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. அதில், 50 கிலோ எடை கொண்ட, ஆறு மூட்டைகளில், 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
சரக்கு ஆட்டோ ஓட்டுனரான, பாலக்காடு கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த வேலுச்சாமி, 62, என்பவரை பிடித்து, போலீசார் விசாரித்தனர். அவர், ஆனைமலை, அம்பராம்பாளையம் பகுதிகளில், குறைந்த விலைக்கு அரிசி வாங்கி, கேரளாவுக்கு கடத்துவது தெரியவந்தது. வேலுச்சாமியை கைது செய்து, அரிசி, சரக்கு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாலிபர் மீது 'குண்டாஸ்'
பொள்ளாச்சியைச் சேர்ந்த, 21வயது இளம்பெண் ஒருவருக்கு, சில தினங்களுக்கு முன் ஸ்ரீவினோத், 28, என்ற வாலிபர், பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதுகுறித்து, இளம்பெண் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், அளித்த புகாரின் பேரில், போலீசார் ஸ்ரீவினோத்தை கைது செய்தனர்.
தொடர்ந்து, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., பத்ரிநாராயணன், கலெக்டர் சமீரனுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, ஸ்ரீவினோத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, நேற்று, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கடந்த, ஒரு மாதத்தில் மட்டும், கோவை மாவட்டத்தில், 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
கிராவல் மண் கடத்தல்; ஒருவர் கைது
கோவை --- வீரப்பகவுண்டனுார் சாலையில், கோவிந்தநாயக்கனுார் பஸ் ஸ்டாப் அருகே, கோவை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனிதுணை தாசில்தார் பிரேமலதா தலைமையிலான, அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கேரள பதிவு எண் கொண்ட, டிப்பர் லாரியை சோதனை செய்ததில், கிராவல் மண் இருந்தது தெரிந்தது.லாரி ஓட்டுனரிடம் விசாரித்தபோது, அவர், கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த, ஆனந்தகிருஷ்ணன், 39, என்பது தெரியவந்தது.
விசாரணையில், திலீப் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் இருந்து, கிராவல் மண் எடுக்கப்பட்டு, அதேபகுதியில் உள்ள மனோகரன் என்பவருடைய தோட்டத்தில், மண்ணை கொட்ட சென்றது தெரிந்தது. இதையடுத்து, ஆனந்தகிருஷ்ணனை கைது செய்த போலீசார், கிராவல் மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
பட்டாசு பதுக்கிய இருவர் கைது
ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார், சேத்துமடை ரோட்டை சேர்ந்தவர் உதயகுமார், 47; டிபார்ட்மண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது கடையில் அனுமதியின்றியும், பாதுகாப்பற்ற முறையிலும், பட்டாசுகள் வைத்திருப்பதாக, ஆனைமலை போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. போலீசார் ஆய்வு செய்து, 61 பாக்கெட் பட்டாசுகளை பறிதமுல் செய்தனர். உதயகுமாரை கைது செய்தனர்.
இதேபோல், மீனாட்சிபுரத்தை சேர்ந்த அண்ணாமலை, 51, என்பவரிடம் இருந்து, 64 பட்டாசு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். அதன்பின் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சூதாடிய 6 பேர் கைது
நெகமம் அருகே, செட்டிபுதுாரில் ஈஸ்வரசாமி குடோனில் பணம் வைத்து சூதாடுவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பணம் வைத்து சூதாடிய, கோப்பனுார்புதுாரை சேர்ந்த ஈஸ்வரசாமி, 57, வெங்கடேஷ், 45, வெற்றிவேல், 49, கிருஷ்ணசாமி, 74, வெங்கடேசன், 47, தியாகராஜன், 63, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 27,530 ரூபாய் பணம் மற்றும், சீட்டு கட்டு பறிமுதல் செய்யப்பட்டது.