பொள்ளாச்சி:தென்னை விவசாயிகள், தேங்காய் பறிக்கும் இயந்திரத்தை பயன்படுத்த முன்வர வேண்டும் என, வேளாண் பொறியியல் துறை, அதிகாரிகள் அழைத்துள்ளனர்.
பொள்ளாச்சி, வேளாண் பொறியியல் துறையின் கீழ், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாக்களுக்கு உட்பட்ட விவசாயிகள், பல்வேறு இயந்திரங்களை மானிய விலையில் பெறுகின்றனர்.
தமிழக அரசின், சோலார் பம்ப்செட், சோலார் டிரையர், சோலார் வேலி, தனி நபர்களுக்கு வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டம், மரச்செக்கு எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் மற்றும் வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, தேங்காய் பறிக்கும் இயந்திரங்களை பயன்படுத்த, தென்னை விவசாயிகள் முன்வர வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
எளிதாக தேங்காய் பறிக்க வசதியாக, இரண்டு நவீன இயந்திரங்கள், பொள்ளாச்சி கோட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
உழவன் செயலி வாயிலாகவோ, வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை, நேரடியாக தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்தால், தோப்புகளுக்கு தேங்காய் பறிக்கும் இயந்திரம் கொண்டு வரப்படும்.
இதில், தேங்காய் பறிக்கும் நேரத்துக்கு, கட்டணமாக ஒரு மணிநேரத்துக்கு, 450 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம். இக்கருவி வாயிலாக, ஒரு மணி நேரத்தில், 20 தென்னை மரங்களில் தேங்காய்கள் பறிக்கலாம்.
இந்த இயந்திரம் வாயிலாக, தென்னை மரங்களில் மட்டைகள் மற்றும் பாளையை எளிதில்வெட்டி அகற்றலாம், மருந்து அடிக்கலாம்.
மேலும், விபரங்களுக்கு பொள்ளாச்சி, வேளாண் பொறியியல் துறையின், உதவி செயற்பொறியாளரை 94435 -66451 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினார்.