குரோம்பேட்டை : சென்னை பெருநகருக்கான மூன்றாவது முழுமை திட்டத்திற்கு, தொலைநோக்கு ஆவணம் தயாரிக்க, பொதுமக்களிடம் கருத்து கேட்க, குரோம்பேட்டையில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது
பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி தலைமையில், மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இதில், பொதுமக்கள் மற்றும் பொது நலச்சங்கத்தினர் கூறிய கருத்துக்கள்:
குரோம்பேட்டை ஏரி பகுதியில் வாழும் மக்கள், அதே பகுதியில் பல ஆண்டுகளாக வசிப்பதால் அவர்களுடைய வாழ்வாதாரம், கல்வி, மருத்துவமனை உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கின்றன.
அதனால், அந்த இடத்தை விட்டு, வேறு இடத்திற்கு மாறுவதற்கான சூழலை ஏற்க தயக்கம் இருக்கிறது.
அதற்கு தீர்வாக, ஏரியில் 10 சதவீதம் பகுதியை, வருவாய் துறையில் 'கிளாசிபிகேஷன்' வகைப்பாட்டை மாற்றி அமைத்து, அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, மறு குடியமர்ப்பு செய்ய வேண்டும்.
அதேநேரத்தில், மீதமுள்ள, 90 சதவீதம் பகுதியை காப்பாற்றி பாதுகாக்க வேண்டும். அதேபோல், ஜி.எஸ்.டி., சாலையில், தொடர்ச்சியாக பெரிய வணிக வளாகங்கள் அமைவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதனால், வணிக வளாகங்களுக்கென, தனியாக ஒரு பகுதியை ஒதுக்கி, அங்கு கட்டடம் கட்ட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.