மாங்காடு : மாங்காடு அடுத்த பட்டூரில், பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து தினமும், பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பிராட்வே செல்லும் அரசு பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை, நேற்று, அவ்வழியாக சென்ற மனநலம் பாதித்த நபர், கல்லை வீசி உடைத்தார். முன்பக்கக் கண்ணாடி முழுதும் நொறுங்கியது. இதனால் பீதியடைந்த பயணியர், அலறியடித்து பேருந்தில் இருந்து இறங்கினர்.
அங்கிருந்த அரசு பேருந்து ஓட்டுனர்களும், நடத்துனர்களும் சேர்ந்து, மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தரதரவென இழுத்துச் சென்று, கயிறால் கட்டி வைத்து தாக்கினர்.
இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர், தன் மொபைல் போனில் படம் எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.