திருப்போரூர், : செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த சில காவல் நிலையங்களையும், சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் இருந்த காவல் நிலையங்களையும் பிரித்து, சென்னைப் புறநகரான தாம்பரத்தில், புதிய காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டு, அதில் இணைக்கப்பட்டன.
இந்த காவல் ஆணையரகத்தின் கீழ், பள்ளிக்கரணையில் இணை ஆணையர் அலுவலகம் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
இந்த இணை கமிஷனரின் கட்டுப்பாட்டில், கேளம்பாக்கம் உதவி கமிஷனர் அலுவலகம் வருகிறது.
கேளம்பாக்கம், கானத்துார், தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களும், விரைவில் தொடங்கப்பட உள்ள சிறுசேரி உள்ளிட்ட காவல் நிலையங்களும், இந்த கேளம்பாக்கம் உதவி கமிஷனரின் கட்டுப்பாட்டில் இயங்கும்.
கானத்துார், கேளம்பாக்கம், தாழம்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களின் எல்லைக்குள், வாகன விபத்து நடந்து வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டாலோ, உயிர்ச்சேதம் ஏற்பட்டாலோ, பள்ளிக்கரணையில் செயல்படும் இணை ஆணையர் காவல் நிலையத்தில் தான் புகார் செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது உள்ளது.
அங்கிருந்து போலீசார் வந்து, விபத்து நடந்தது எப்படி, விபத்திற்கு காரணம் யார் என்பது குறித்து ஆய்வு செய்து, புகைப்படங்களை எடுத்த பிறகே, வழக்கு பதிவு செய்து, வாகனம் சேதம் அடைந்ததற்கான சான்றிதழ் அல்லது உயிரிழப்புக்கான எப்.ஐ.ஆர்., போன்றவற்றை வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, பொதுமக்களுக்கு வீண் அலைச்சலை உருவாக்குவதாக கருத்து எழுந்துள்ளது.
கானத்துார், கேளம்பாக்கம், தாழம்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க, கேளம்பாக்கம் அல்லது நாவலுாரில், போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க, தாம்பரம் கமிஷனர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.