காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் கிராமத்தில் மழை நீர் செல்வதற்காக கால்வாய் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் கட்டப்பட்டது. அந்த கால்வாய் ஆதிதிராவிடர் குடியிருப்பு வழியாக அமைக்கப்பட்டுள்ளது.
கால்வாய் நீர்நிலை மற்றும் குளம், ஏரி, குட்டைபோன்றவற்றில் கலக்கும் வகையில் இணைப்பு கொடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால்தான் தண்ணீர் கால்வாயில் தேங்காமல் செல்லும். ஆனால் அந்த கால்வாய் செல்லும் வழியில் வயலுக்கு செல்வதற்காக சிலர் கால்வாயை மூடியுள்ளனர். இதனால் கால்வாயில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இதற்கு முன் எங்கள் பகுதியில் மழை நீர் கால்வாய் வசதி இல்லை. மழை காலத்தில் தண்ணீர் பள்ளம் உள்ள பகுதிக்கு சென்று விடும் அருகில் ஏரி உள்ளது அங்கு சென்று விடும். மழை காலம் முடிந்ததும் தண்ணீர் தேங்காது.
தற்போது மழை நீர் கால்வாய் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டினர். அதன் பின்தான் கால்வாயில் தண்ணீர் தேங்கி கொசு அதிகரிக்க துவங்கியது.
பலர் வீட்டு கழிவு நீர் கால்வாயில் விடுவதால் அந்த தண்ணீர் கால்வாயில் தேங்கி அசுத்தமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. கால்வாய் கட்டினால் பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஒரு பகுதி மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.