உத்திரமேரூர் : காவணிப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், அரசு திட்டங்கள், சலுகைகள் மற்றும் பயிர் கடன் முறையாக வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சீத்தாவரத்தில், காவணிப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்குகிறது.
அரும்புலியூர், சீத்தாவரம், பேரணக்காவூர், காவணிப்பாக்கம், பட்டா, அருங்குன்றம், மதுார் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், இந்த கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக உள்ளனர்.
நெல் மற்றும் கரும்பு விவசாயம் இப்பகுதிகளில் பிரதானமாக உள்ளது.
இப்பகுதி விவசாயிகளுக்கு சாகுபடி மேற்கொள்ள கூட்டுறவு வங்கி மூலம் கடனுதவி கிடைப்பதில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மேலும், அவ்வப்போது அரசு வழங்கும் வேளாண் திட்ட சலுகைகள் குறித்த அறிவிப்பு, விவசாயிகளுக்கு முறையாக தெரியபடுத்துவதில்லை என புகார் எழுந்துள்ளது.
அரும்புலியூர் விவசாயிகள் கூறியதாவது:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம், அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகளுக்கு கடனுதவி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், இங்குள்ள காவணிப்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு மட்டுமே, தொடர்ந்து சலுகைகள் வழங்குகின்றனர்.
இதுகுறித்து, கேட்டால் நிதி இல்லை எனக்கூறி தட்டி கழிக்கின்றனர். எனவே, இந்த வங்கியில் பாரபட்சமின்றி பதிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும், பயிர் கடன் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.