புதுச்சேரி : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதத்திற்குள் சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.
புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் சார்பில் பள்ளிகளுக்கான தடகளப் போட்டிகள் நடந்தது. இதில், 8 மண்டலங்களுக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவர்கள், 298 மாணவியர் என, மொத்தம், 648 பேர் பங்கேற்றனர். போட்டிகள் 14, 17, 19 வயது என 3 பிரிவுகளில் நடந்தது.
குண்டு எறிதலில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் காரைக்கால் நிர்மலா ராணி மகளிர் பள்ளி மாணவி ஜனனிகா 9.34 மீ., துாரமும், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் வில்லியனுார் கண்ணகி அரசு பெண்கள் பள்ளி மாணவி லோகிதா 10.27 மீ., துாரமும் எறிந்து சாதனை படைத்தனர்.
19 வயதுக்குட்பட்ட பிரிவில் தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கோபிகா வட்டு எறிதலில் 26.39 மீ.,துாரம் எறிந்தும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் காரைக்கால் நிர்மலா ராணி பள்ளி மாணவி ஹரிபிரியா நீளம் தாண்டுதலில் 4.62 மீ., துாரம் தாண்டியும் சாதனை படைத்தனர்.
17 வயதுக்குட்பட்ட பிரிவில் ஒதியம்பட்டு செயின்ட் ஜோசப் குளுனி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி மதுமிதா 200 மீ., ஓட்டத்தை 26.25 வினாடிகளில் கடந்தும், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் பாகூர் ஆல்பா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி ஆர்த்திகா ஈட்டி எறிதலில் 22.97 மீ., துாரம் எறிந்து சாதனை படைத்தனர்.
பரிசளிப்பு விழா கோரிமேடு காவல் துறை மைதானத்தில் நடந்தது. பள்ளிக் கல்வி இயக்குனர் ருத்ர கவுடு தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர் முதல்வர் ரங்கசாமி போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பேசுகையில், 'மாணவர்கள் எதை படிக்க வேண்டும் என, விரும்புகிறார்களோ அதனை கொண்டு வருவது தான் புதுச்சேரி அரசின் எண்ணம். இதற்கான செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
தனியார் கல்லுாரிகள் துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நன்றாக படித்தால் நல்ல சிந்தனைகள் வளரும். அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு அடுத்த மாதத்திற்குள் சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அரசு கொறடா ஆறுமுகம் வாழ்த்திப் பேசினார்.