புதுச்சேரி : சர்வதேச குழந்தை உரிமை தினத்தை முன்னிட்டு குழந்தை தலைவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.
இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் சார்பில், நடந்த விழாவில், அரசு செயலர் முத்தம்மா, கலெக்டர் வல்லவன், எஸ்.பி., விஷ்ணுகுமார், வருவாய்த்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், வரதட்சணை தடுப்பு ஆலோசனைக் குழு தலைவி வித்யா ராம்குமார் உள்ளிட்டோர் விருதுகளை வழங்கினர்.
இவ்விருது குழந்தை நேயப் பணிகளை செய்யும் குழந்தைகள், அவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர், காவலர், பள்ளி, நிறுவனம், குடும்பம் மற்றும் கிராமங்களை அங்கீகரிக்க வழங்கப்படுகிறது. அதன்படி, புதுச்சேரி, சென்னை, கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருக்கும் 10 முதல் 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
குழந்தை தலைவர் விருதுகளில், 'அன்னை தெரசா விருது' (புதுச்சேரி) காவியாவிற்கும், 'மலாலா யூசுப்சாய் விருது' (புதுச்சேரி) அஸ்வினிக்கும், 'எரிக் எரிக்சன் விருது' (சென்னை) பிரதிக்கிற்கும், 'நெல்சன் மண்டேலா தகவல் தொடர்பாளர் விருது' அனன்யா தோமருக்கும் வழங்கப்பட்டது.
இதேபோல், குழந்தை நேய விருதுகளில், 'குழந்தை நேய குடும்ப விருது' (புதுச்சேரி) கலைவாணி மற்றும் வெற்றிவேலன் தம்பதியருக்கும், 'குழந்தை நேய கிராம விருது' பரங்கிணி (விழுப்புரம் மாவட்டம்) கிராமத்திற்கும், 'குழந்தை நேய ஆசிரியர் விருது' (புதுச்சேரி) நித்யாவிற்கும், 'குழந்தை நேய ஆசிரியருக்கான சிறப்பு விருது' (புதுச்சேரி) மஞ்சுளாவிற்கும் வழங்கப்பட்டது.
'குழந்தை நேய நிறுவனம் விருது' (புதுச்சேரி) ஜூபிலண்ட் இசைப்பள்ளி நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.