பாதுகாப்பு வளையத்தில் புதுச்சேரி நகரம்
இந்தியாவில் 'ஜி- 20'மாநாடு நடப்பதால் நாடு முழுவதும் 200 நகரங்களில் பல தலைப்புகளில் சர்வதேச அளவில் 'ஜி- 20' உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடந்து வருகிறது.
இதையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் ஜி 20 தொடக்க நிலை மாநாடு இன்று மற்றும் நாளை நடக்கிறது.
இதில், பங்கேற்க 'ஜி- 20'உறுப்பு நாடுகள் மற்றும் 20 நட்பு நாடுகளுக்கு இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு, நுாறடி சாலையில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் இன்று (30ம் தேதி) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புபின் கீழ் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி தலைப்பில் என்ற சர்வதேச மாநாடு நடக்கிறது.
இதில், உறுப்பு மற்றும் நட்பு நாடுகள், இந்திய நாட்டின் சுற்றுச்சூழல், அறிவியல், தொழில்நுட்ப துறைகளை சேர்ந்த விஞ்ஞானிகள் பலர் பங்கேற்கின்றனர்.
நாளை (31ம் தேதி) ஆரோவில் சென்று பல பகுதிகளை பிரதிநிதிகள் பார்வையிடுகின்றனர். இதில், இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 75 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இவர்கள் தங்க புதுச்சேரி நகர பகுதியில் நட்சத்திர ஓட்டல்களும், சின்ன வீராம்பட்டினம் பீச் ரிசார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க சுவீடனை சேர்ந்த ஏர்னி யுரிக்ஸ் டோன், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பியோரிக் பில்லான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்வீந்தர் சிங் ஆகியோர் விமானம் மூலம் நேற்று புதுச்சேரிக்கு வந்தனர்.
மதியம் 1:10 மணிக்கு, வந்த பிரதிநிதிகளை கலெக்டர் வல்லவன், அரசு தலைமை செயலாளர் ராஜிவ்வர்மா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அனைவரும் பிரபல ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உறுப்பு மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பாதுகாப்பிற்காகவும், அசம்பாவிதம் ஏதும் நேராமல் இருக்கவும் இவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் மாநாடு அரங்கு, ஏர்போர்ட் ஆகிய பகுதிகளில் புதுச்சேரியை சுற்றிலும் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு வந்துள்ள பிரதிநிதிகள் தங்கியுள்ள ஓட்டல்களில் மற்றும் மாநாடு நடைபெறும் இடத்தில் ஏ.கே., 47 ரக துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.நகர பகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநில எல்லை பகுதிகளிலும் போலீசார் 300க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அது மட்டுமின்றி, புதுச்சேரி பாரம்பரிய கட்டடங்களான சட்டசபை வளாகம், தலைமை செயலகம், மேரி கட்டம், டி.ஜி.பி., அலுவலகம் உட்பட தலைவர்களின் சிலைகளும் மின் விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'ஜி- 20' மாநாட்டை யொட்டி, புதுச்சேரி நகர பகுதிகள் அனைத்தும் புது பொலிவோடு மின்னுவதோடு, 144 தடை உத்தரவால் பல இடங்கள் அமைதியாக காணப்படுகிறது.