விழுப்புரம் : விழுப்புரத்தில் மாட்டு வண்டிகளுக்கு மணல் குவாரி திறக்க வே ண்டும் என்று, பவ்டா மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான மாட்டு வண்டி தொழிலாளர்கள், ஆறுகளில் மணல் எடுத்து, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ உதவி வருகின்றோம். தற்போது தொழில் இல்லாத நிலையை உணர்ந்து, குவாரி அமைக்க வேண்டினோம். அதனடிப்படையில், ஏனாதிமங்கலம் மணல்குவாரி திறக்கப்பட்டது.
இதனால், நீர்வளத்துறையை அணுகி வேண்டினோம். அவர்கள் லாரிகளுக்கு மட்டும்தான் அனுமதி பெறப்பட்டுள்ளது. உங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆட்சியர் அனுமதி கொடுத்தவுடன், மாட்டு வண்டிக்கு குவாரி திறக்கப்படும் என கூறிவிட்டனர்.
முந்தைய ஆட்சியர், லாரிகளுக்கான குவாரியில் 15 சதவீதம் மாட்டுவண்டிகளுக்கும் மணல் வழங்கி, மணல் எடுத்து செல்லும் முறையை முறைபடுத்தி நடத்தினார்.
அடுத்து நாங்கள் அண்ராயநல்லுார் , அரசமங்கலத்திலும் தனி குவாரி வேண்டினோம். அதற்கு அனுமதி பெற்றும் எங்களுக்கு மணல் வழங்கப்படவில்லை. காவணிப்பாக்கம், சித்தாத்தூர், அரசமங்கலம், ராம்பாக்கம், தகடி, முடியனூர், அந்திலி, அசப்பூர், புதுப்பட்டு, வெ.அகரம் ஆகிய இடங்களில் குவாரிகளை திறந்து, மாட்டு வண்டி தொழிலாளர்களின் குடும்பங்களும், கால்நடைகளும், பிற தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.