விழுப்புரம், : அரசு வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிய தகராறில் அ.தி.மு.க., கிளை செயலாளர் உள்ளிட்ட 4 பேரை தாக்கிய, அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட ஆறுபேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த நல்லரசன்பேட்டையை சேர்ந்தவர் உதயசூரியன், 58; அ.தி.மு.க., கிளை செயலாளர்.
இவர் கோலியனுாரை சேர்ந்த வீரமுத்து என்பவரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.
அந்த பணத்தை நல்லரசன்பேட்டையை சேர்ந்த கோலியனுார் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், 50; என்பவரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில், 5 ஆண்டுகளாகியும் வேலை வாங்கி கொடுக்காததால், நேற்று முன்தினம் இரவு உதயசூரியன் பணத்தை திருப்பி கேட்டார்.
அப்போது, ஏற்பட்ட தகராறில் முருகன் மற்றும் அவரது உறவினர்கள் மணிகண்டன் என்கிற விக்னேஷ், 32; கலையரசன் என்கிற கலைவேந்தன், 32; ராஜி, 52; பிரபாகரன், 45; கார்த்தி, 38; ஆகியோர் சேர்ந்து உதயசூரியன் மற்றும் அவரது மகன்கள் சதீஷ்குமார், 35; சரத்குமார், 29; மற்றும் அவரது உறவினர் அய்யனார், 44; ஆகியோரை கத்தி, தடியால் தாக்கியுள்ளனர்.
இதில் சதீஷ்குமார், சரத்குமார், அய்யனார் ஆகியோரின் தலையில் பலத்த காயமும், உதயசூரியனுக்கு வலது தோலில் காயமும் ஏற்பட்டது. இதை தடுக்க வந்த உதயசூரியன் மனைவி வசந்தா, மகள் இளவரசி, சதீஷ்குமார் மனைவி சரண்யா ஆகியோரையும் முருகன் உள்ளிட்டோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட 6 பேர் மீது வளவனுார் போலீசார் கொலை முயற்சி பிரிவில் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டன், கலையரசன், ராஜியை கைது செய்து விசாரிக்கின்றனர்.