திண்டிவனம் : விழுப்புரம் எம்.பி.,ஏற்பாடு செய்திருந்த கருத்து கேட்பு கூட்டத்தில், திண்டிவனம் பகுதி எந்த வித முன்னேற்றமும் அடையவில்லை என சரமாரியாக கோரிக்கை வைத்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு வரும் 1 ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. இதில், விழுப்புரம் லோக்சபா தொகுதி உட்பட்ட திண்டிவனம் பகுதியை சேர்ந்த பொது மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நேற்று காலை திண்டிவனத்தில் நடந்தது.
கே.ஆர்.ஆஸ்.அம்மா ஹாலில் நடந்த கூட்டத்திற்கு வி.சி.மாவட்ட செயலாளர் சேரன் தலைமை தாங்கினார். ரவிகார்த்திகேயன் வரவேற்றார். விழுப்புரம் தொகுதி எம்.பி.,ரவிக்குமார் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் பேசியதாவது:
திண்டிவனம் கடந்த 30 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றம் இல்லாமல் அப்படியே உள்ளது. விழுப்புரம், செஞ்சி, திருக்கோவிலுார் பகுதிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது போல, திண்டிவனம் தொகுதி முன்னேற்றம் அடையவில்லை. எம்.பி.,எம்.எல்.ஏ.,மற்றும் அமைச்சர்கள் என பலர் இருந்தும் முன்னேற்றம் இல்லை.
திண்டிவனத்தில் அரசு வேளாண் கல்லுாரி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டிவனம் பகுதியில் அதிக அளவில் தர்பூசணி விளைவதால் குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும்.
செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம் வரை பாசஞ்சர் ரெயில் இயக்க வேண்டும். இதேபோல் திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரி வரை ரயில் சேவை துவங்க வேண்டும்.
108 ஆம்புலன்சுகள் ஜிப்மர் மருத்துவனைமக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பேசிய எம்.பி.,ரவிக்குமார், '' கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
கூட்டத்தில் வர்த்தக பிரமுகர்கள் பி.ஆர்.எஸ்.துணிக்கடை ரங்கமன்னார் உர வியாபாரிகள் சங்கம் பாண்டியன், கல்கண்டுசுந்தரம், பேராசிரியர்கள் பிரபாகல்விமணி, கோவிந்தசாமி, வழக்கறிஞர் பூபால், நுாலகர் ராஜேஷ், முருகப்பன், திண்டிவனம் நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமிவெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை வைத்தனர். வழக்கறிஞர் திலீபன் நன்றி கூறினார்.