கடலுார்: ''தமிழ்நாட்டில், மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும்'' என, கடலுாரில் நடந்த சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலுாரில், இரண்டு நாட்களாக நடந்த சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாட்டின் நிறைவாக, மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது.
பொதுக் கூட்டத்தில், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது:
கடலுார் புண்ணிய பூமியில் சனாதன இந்து தர்மத்தை பாதுகாக்க மாநாடு நடத்தப்பட்டது. கடவுளே இந்து மக்கள் கட்சியாக வந்து, சனாதனத்திற்கு வரும் ஆபத்தை காப்பாற்ற மாநாடு நடத்தியதாக அறிகிறோம்.
இந்த மாநாட்டில், தமிழ்நாடு கவர்னர் ரவிக்கு பாராட்டு தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களை, திராவிட மாடல் ஆட்சி எழுதி கொடுத்த எதையும் படிக்காமல், வெளிநடப்பு செய்ததால், அவரை பாராட்டியுள்ளோம்.
'சர்ச் சொத்து கிறிஸ்தவர்களுக்கு, மசூதி சொத்து முஸ்லிம்களுக்கு, ஆலய சொத்து மட்டும் மதசார்பற்ற அரசிடமாம். எனவே, ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாத அரசே ஆலயங்களை விட்டு வெளியேறு, ஆலயங்களை வழி நடத்த இந்து நம்பிக்கை உள்ளவர்கள் கொண்ட அமைப்பை உருவாக்கு' என, மாநாடு வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்து, தமிழர்களுக்கு சமய கல்வி நீதி போதனை, இந்து சமய கல்வி வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் மதம் திணிக்கப்படுகிறது. மோசடி மதமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு வி.சி., கட்சி, திராவிட கழகம் துணை நிற்கிறது. நானும் கிறிஸ்தவர் என்கிறார் உதயநிதி.
எனவே, மோசடி மத மாற்றம் தடை சட்டம் கொண்டு வர வேண்டும். இச்சட்டத்தை ஏற்கனவே ஜெயலலிதா கொண்டு வந்தார்.
அ.தி.மு.க., ஆட்சியில் டாஸ்மாக்கை மூட போராடிய கோவனை காணோம். இப்போது, திராவிட மாடல் ஆட்சியில் திருமுருகன் காந்தி, திருமாவளவனை காணோம். வைகோவுடன் சேர்ந்து டாஸ்மாக் கடையை உடைச்சாங்க. இப்போது ஏன் உடைக்க வரவில்லை...
சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இப்போது 8 வழிச்சாலையை வேண்டும் என்கிறார்கள். பல போராளிகளை இப்போது காணோம். இந்து மதத்தை திட்டுவதை மட்டுமே ஒரு வேலையாக வைத்துள்ளனர். ராமர் பாலத்தை வெடி வைத்து தகர்ப்போம் என்கிறார் ஒருவர். நான் சவால் விடுகிறேன்.
உங்களால் ராமர் பாலத்தின் மீது கை வைக்க முடியுமா... மற்ற மதத்தினரை ஏமாற்றலாம். இந்துக்களை ஏமாற்ற முடியாது.
திருமாவளவன் எது வேண்டுமானாலும் பேசினால், இந்து சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம். முஸ்லிம் நேரடியாக எங்களை எதிர்ப்பதில்லை.
திருமாவளவன் மூலமாக தடை செய்கிறார்கள். அவரது பினாமி மூலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயங்குகிறது. எங்களை மிரட்டலாம் என, நினைக்க வேண்டாம்.
நாங்கள் 'அல் உமா'வையே பாத்தவங்க. எதற்கும் பயப்பட மாட்டோம். வி.சி., அமைப்பு பல்வேறு தேச விரோத செயல்களில், பிரிவினை வாதத்தில் ஈடுபட்டு வருவதால், அந்த அமைப்பை அரசு தடை செய்ய வேண்டும்.
அ.தி.மு.க., பழனிசாமி ஆட்சியில் விவசாயிகள் வேளாண் மண்டலம் அமைக்கப்பட்டது. தற்போது தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். எந்த திட்டம் வந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அமைச்சர்கள் பொன்முடி, நேரு, நாசர் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள். கல்லை எடுத்து தொண்டரை அடிக்க விரட்டுகிறார். இப்படியே போனால் தமிழக மக்களுக்கு என்ன பாதுகாப்பு...
தமிழகத்தில் நதிகள் இணைக்கப்பட வேண்டும்; நதிகள் காப்பாற்றப்பட வேண்டும். சனாதனம் இந்த மண்ணில் தோன்றிய தர்மம். மோசடி மதமாற்றத்ததால் பாதிக்கப்படுகிறது.
இறைவனின் துணையோடு தர்மத்தை நாம் காப்பாற்றினால், அறம் நம்மை காப்பாற்றும். அதற்காக நாம் இங்கு சங்கமித்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.