மதுரை : கோயில்களை இடிப்பேன்; கையை வெட்டுவேன் என்ற தி.மு.க., பொருளாளர் டி.ஆர்., பாலுவின் பேச்சு தி.மு.க.,வின் வன்முறை எண்ணத்தையே காட்டுகிறது, என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.
மக்கள்தான் எஜமானர்கள். அவர்களாக பார்த்து ஓட்டளிப்பவர்களே வெற்றி பெறுவர். எங்களுக்கு சின்னம் கிடைக்காததால் வேட்பாளரை அறிவிக்கவில்லை எனக் கூறுவது தவறு.
நீதிமன்றம் ஏற்கனவே எங்களுக்கு சாதகமாக கூறிவிட்டது. சின்னம் கிடைக்க காத்துக்கொண்டிருக்கிறோம். மக்கள் எங்களை தான் உண்மையான அ.தி.மு.க., என நினைக்கின்றனர்.
தற்போது மக்கள் தி.மு.க.,வுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். தேடிப் போய் கூட்டணிக்கு அழைக்க வேண்டிய நிலை அ.தி.மு.க.,விற்கு இல்லை.
நாங்கள் யாருக்கும் எஜமானர் இல்லை; அடிமையும் இல்லை. ஈரோடு தேர்தலில் மக்கள் பழனிசாமி பக்கம்தான் உள்ளனர். இடைத்தேர்தல் சாக்கடை என கூறிய இளங்கோவன் ஏன் போட்டியிட வேண்டும்.
மூத்த மத்திய அமைச்சராக இருந்தவர், தி.மு.க.,வில் பொறுப்பு மிக்க பதவியில் உள்ள டி.ஆர். பாலு, வன்முறையை கையில் எடுக்கும் வகையில் பேசியது முறையல்ல.
வீரமணிக்கு பாலு குறிப்பிட்டதுபோல் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் தி.மு.க., எவ்வளவு வன்முறை எண்ணம் கொண்டது என்பதை மக்கள் புரிந்துகொள்வர்.
பகுத்தறிவு கொள்கை சிந்தனையில் இருந்து வெளியேறி தமிழக மூத்த அமைச்சர் நேரு உதயநிதி, மகன் இன்பநிதிக்கும் கொடிபிடித்து பேசி வாரிசு அரசியலின் அடையாளத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார், என்றார்.