கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் 15 ஆயிரம் பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் கள்ளக்குறிச்சி வனசரக அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் வன அலுவலர்கள், கல்லுாரி மாணவர்கள், பறவை ஆர்வலர்கள் என 5 குழுக்களாக பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதில் அதிகரிக்கும் பறவை இனங்கள் மற்றும் குறைந்து வரும் பறவை இனங்கள் என தனி தனியாக பதிவு செய்யப்பட்டன. இதில் தோசி கொக்கு, கூகை ஆந்தை, மாங்குயில் உள்ளிட்ட 15 வகையான அரியவகை பறவை இனங்கள் மற்றும் மத்திய ஆசியா, இமயமலை போன்ற பகுதிகளில் வாழும் பறவைகள் இனங்களும் கண்டறியப்பட்டது.
அதேபோல் அதிகளவில் சின்ன வெள்ளைகொக்கு, பெரிய கொக்கு, சாம்பல் நிற நாரை, புள்ளி மூக்கான் வாத்து, நாமக்கோழி போன்ற பறவை இனங்கள் காணப்பட்டது. மாவட்டத்தில் 94 பறவை இனங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் பறவைகள் கணக்கெடுப்பில் இருந்தது தெரிந்தது.
அழிந்து வரும் பறவை இனங்களை வரும் காலங்களில் பாதுகாப்பதற்கு இந்த கணக்கெடுப்பு பெரும் உதவியாக இருக்கும் என்று வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
யுரோஷியன் பறவை கள்ளக்குறிச்சி அடுத்த வி.அலம்பளம் ஏரியில் ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சிறிய யுரோஷியன் உரைநெக்(யுரேசிய மரங்கொத்தி) இருப்பது பதிவு செய்யப்பட்டது. பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, யுரோஷியன் உரைநெக், 17 செ.மீ.அளவு மட்டுமே இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் பனி அதிகம் இருக்கும்போது, இந்தியா, ஈரான் துணை கண்டங்களில் இவை வலம் வருகின்றன. இவை கள்ளக்குறிச்சியில் கண்டறிந்து பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.