வேலுார், : வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அருகே தீர்த்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ், 22; தனியார் பேக்கரி கடை தொழிலாளி. இவர், ஒடுக்கத்துாரைச் சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவி, பள்ளி சென்று வரும்போது, தினமும் காதல் தொல்லை கொடுத்து வந்தார்.
மாணவியின் பெற்றோர், நேற்று முன்தினம் பேக்கரிக்கு சென்று சந்தோஷை தாக்கினர். பின், வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.
ஆத்திரமடைந்த சந்தோஷ் மற்றும் அவரது உறவினர்கள், நேற்று மாணவியின் வீட்டுக்கு சென்று, அங்கிருந்தவர்களை தாக்கினர். இதில், மாணவி உள்ளிட்ட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த சந்தோஷ் மற்றும் வீடு புகுந்த தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, மாணவியின் உறவினர்கள், ஒடுக்கத்துார் பஸ் ஸ்டாண்டில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தீக்குளிக்க முயன்ற மூன்று பெண்களை போலீசார் தடுத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை அடுத்து, அவர்கள் கலைந்தனர்.