திருநெல்வேலி : கந்துவட்டி வாங்கி கொடுமை படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதியவர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பெருந்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் 74. கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்தியவாணி. மகன் செல்வன் 24. திருக்குறுங்குடி அருகே நம்பித் தலைவன் பட்டயத்தைச் சேர்ந்த மலையப்பன் 40, என்பவரிடம் ஆறுமுகம் ரூ 20 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அதற்கு வாரம்தோறும் ரூ 2 ஆயிரம் வீதம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக வட்டி கொடுத்துள்ளனர்.
5 மாதங்களாக வட்டி கொடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமுற்ற மலையப்பன் ஜன.,17ல் ஆறுமுகம் குடும்பத்தினர் வேலை பார்க்கும் ராதாபுரம் மகேந்திரபுரத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கு சென்று ஆறுமுகம் மனைவியிடம் தகராறு செய்து ஜாதியை குறிப்பிட்டு அவதூறாக பேசியுள்ளார்.
மனமுடைந்த ஆறுமுகத்தின் மகன் செல்வன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் மலையப்பன் மீது பணகுடி போலீசார் கந்துவட்டி வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை.
அவர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்ய செல்வன் புகார் செய்திருந்தார். அதன் பிறகும் ஆறுமுகம் குடும்பத்தினரை மலையப்பன், மிரட்டியுள்ளார். எனவே நேற்று ஆறுமுகம், சத்தியவாணி, செல்வம் ஆகியோர் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கொண்டு வந்திருந்த பெட்ரோலை தலையில் ஊற்றி ஆறுமுகம் தீக்குளிக்க முயற்சித்தார். அங்கிருந்த போலீசார், தீயணைப்பு படையினர் அவரை மீட்டனர்.
திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் 2017 அக்டோபரில் கந்துவட்டிக் கொடுமையால் கடையநல்லூரை சேர்ந்த ஒரு தம்பதியினர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தீக்குளித்து இறந்தனர். கந்து வட்டி பிரச்னையில் வாரந்தோறும் தீக்குளிப்பு முயற்சிகள் நடக்கின்றன. போலீசாரின் கடுமையான நடவடிக்கையின்மையால் திருநெல்வேலி மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமை தொடர்கிறது.