திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.கவுன்சிலர்கள் இரு கோஷ்டியினராக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இங்கு மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் நான்கு பேர் மட்டுமே அ.தி.மு.க.வினர். மீதமுள்ள 51 பேரும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர். அ.தி.மு.க.வினர் பெரும்பாலும் எந்த கோரிக்கையையும் எழுப்புவதில்லை. ஆனால் தி.மு.க.வினருக்குள் மோதிக்கொள்கின்றனர்.
நேற்றைய மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு மேயர் சரவணன் தலைமை வகித்தார். துணை மேயர் ராஜு கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. கவுன்சிலர் ரவீந்தர் பேசுகையில் மேயர் அறையில் நகர தி.மு.க.செயலாளர் சுப்பிரமணியன் பகுதி செயலாளர் செல்லத்துரை எப்போதும் உட்கார்ந்து கொண்டு கான்ட்ராக்டர்களிடம் போனில் பேசி கமிஷன் கேட்கின்றனர். இதனால் கவுன்சிலர்களோ மற்றவர்களோ மேயரை சந்திக்க முடிவதில்லை என புகார் தெரிவித்தார்.
கவுன்சிலர் கோகுலவாணி பேசுகையில் மாநகராட்சியில் புதிய டிரைவர்கள் நியமனத்துக்கு லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது குறித்து கடந்த கூட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தேன். ஆனால் மேயர் பத்திரிகையாளர்களிடம நான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்ததாக கூறியுள்ளீர்கள். நான் உங்களை சந்தித்து வருத்தம் தெரிவிக்கவில்லை என்றார்.
மண்டல தலைவர் மகேஸ்வரி பேசுகையில் மேயர் வார்டுக்கும் நான் தான் மண்டல தலைவர். ஆனால் என்னை அங்கு குறை கேட்டு செல்ல வேண்டாம் என மேயர் கூறியுள்ளார். மண்டல கூட்டங்களில் வைக்கும் எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுவதில்லை என்றார்.
தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறினர்.
அப்போது மேயர் ஆதரவு கவுன்சிலர்கள் எதிர் தரப்பு கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கூட்டம் நடந்தபோது அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர் தமது இல்ல திருமண விழா அழைப்பிதழை ஒவ்வொரு கவுன்சிலர்களிடமும் சென்று கொடுத்தார்.