தேனி, : போடி தாலுகா, உப்புக்கோட்டையில் நீதிமன்ற ஆவணங்களில் தெரிவித்துள்ளபடி, வருவாய்த்துறை ஆவணங்களின் சமுதாயக்கூடம் அமைந்துள்ள இடம் மாறுபட்டு இருந்ததால் ஆக்கிரமிப்பு அகற்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
உப்புக்கோட்டை வடக்குத் தெருவில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் சமுதாய கூடம் உள்ளது.
இக்கூடமும், அருகில் உள்ள காலியிடங்களும் தனக்கு சொந்தமானது என இவ்வூரை சேர்ந்த காளிமுத்து 90, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது இவர் உயிருடன் இல்லை. மாவட்ட நீதிமன்றத்தில் சமுதாயக்கூடம் அமைந்துள்ள இடம் இறந்த காளிமுத்துக்கு சொந்தமானது என ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நீதிமன்ற பணியாளர்கள், போலீசார் பாதுகாப்புடன், சமுதாய கூட்டத்தை இடித்து அகற்ற நேற்று வந்தனர். இதனால் வடக்குத் தெரு மக்கள், சமுதாய கூடத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூடத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போடி தாசில்தார் ஜலால், தேனி டி.எஸ்.பி., பார்த்திபன், வி.ஏ.ஓ., வெங்கடேசன், ஆர்.ஐ., சரவணன் பேச்சு வார்த்தை நடத்தினர். நீதிமன்ற உத்தரவு ஆவணத்திற்கும், வருவாய்த்துறை ஆவணத்திற்கும் மாறுபாடு இருந்தது சர்வேயர் அளவீட்டில் கண்டறியப்பட்டது. இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக போடி தாசில்தார் அறிவித்து, வருவாய்த்துறையினர் திருப்பிச் சென்றனர். காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமையல் செய்து போராட்டத்தை தொடர்ந்தனர்.