பெரியகுளம் : மத்திய அரசு திட்டங்களில் வழங்கப்படும் தள்ளு வண்டிகளில் பிரதமர் மோடி படம் இடம்பெறாததை கண்டித்து பா.ஜ., வினர் பெரியகுளம் நகராட்சியை முற்றுகையிட்டனர்.
பெரியகுளம் நகராட்சியில் மத்திய, மாநில அரசின் திட்டங்களில் 96 தள்ளுவண்டிகள் ரூ.90.18 லட்சம் மதிப்பீட்டில் தயார் செய்து, முதல் கட்டமாக ஜன. 28 ல் 52 தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் முதல்வர் ஸ்டாலின் படம் மட்டும் இடம் பெற்றிருந்தது என்றும், பிரதமர் மோடி படம் இடம் பெறாததை கண்டித்து பா.ஜ., மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ராஜபாண்டி தலைமையில் நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி, முற்றுகையிட்டனர்.
நகர தலைவர் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தார். ஐ.டி.,பிரிவு மாநில செயலாளர் வசந்த் பாலாஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோபி கண்ணன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நகராட்சி கூட்டரங்கில் பிரதமர், ஜனாதிபதி படங்கள் வைக்க வேண்டும். பொது மயானத்தில் மாற்று மதத்தினருக்கு இடம் தரக்கூடாது.
தள்ளுவண்டிகள் வழங்க பயனாளிகளை பாகுபாடு இன்றி தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி தலைவர் சுமிதா, கமிஷனர் புனிதனிடம் மனு கொடுத்தனர்.