தேனி : Lதுாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து சம்பள உயர்வு வழங்க கோரி தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது.
பாசில் அகமது பயிற்சி கலெக்டர், திட்ட இயக்குனர் தண்டபானி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய மனு விபரம்:
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜெயன் வழங்கிய மனுவில்,' மேல்நிலைத் தொட்டி ஆப்பரேட்டர்கள் துாய்மை பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கிடவும், துாய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் அளித்து சம்பள உயர்வு வழங்க கோரினர்.
இதற்கு முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய கம்யூ., கட்சி சின்னமனுார் ஒன்றிய துணை செயலாளர் சரவணபுதியவன் மனுவில், சின்னமனுார் குளத்துக்கரை நீர்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி பழுதடைந்தும், வெளிபக்கம் புதர் மண்டி பாம்புகளின் கூடாரமாக மாறிவிட்டது.
இதனால் குழந்தைகள் உயிர்க்கு ஆபத்து வரும் முன் புதிய அங்கன் வாடி மையம் அமைத்து தர வேண்டும்'.
மாற்றுத்திறனாளிகள் மாநில நல வாரிய உறுப்பினர் கருப்பையா மனுவில், 'கம்பத்தில் 300 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசிக்கின்றோம்.
இங்கு மாற்றுத்திறனாளிகள் ரேஷனில் மண்ணெண்ணெய் பெற வெகு நேரம் காத்திருந்து வாங்க வேண்டியுள்ளது.
இது எங்களுக்கு உடல், மன ரீதியாகவும் பாதிப்பை தருகிறது. எனவே ரேஷன் கடைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் நான்கு மாதமாக 15 கிலோ அரிசி குறைக்கப்பட்டுள்ளது. இதையும் வழங்க வேண்டும் என்றார்.
சமூக விழிப்புணர்வு, செயல்பாட்டுக்குழு உறுப்பினர் சென்றாயன் மனுவில், 'ஆண்டிபட்டி சுப்புலாபுரம், அருந்ததியர் காலனியில் உள்ள துாய்மை பணியாளர்களுக்கு குப்பை அகற்ற பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்க வில்லை.
இது குறித்து ஊராட்சி தலைவரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காலனிக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருகின்றது தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகிக்க கோரினர்.