ஈரோடு, ஜன. 31-
ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் ஜன., மாதம் சட்டமுறை எடையளவு, பொட்டல பொருட்கள் விதிகள், குறைந்த பட்ச ஊதிய சட்டப்படி ஆய்வு மேற்கொண்டனர். நகைக்கடை, மளிகை, மீன், இறைச்சி கடை என, 53 நிறுவனங்களில் ஆய்வு செய்து, 16 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறிந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுபற்றி உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் சட்டங்களை பின்பற்ற வேண்டும். எடையளவு, மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டல பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தண்டனைக்குரியது. ஆய்வின்போது விதிமீறல் கண்டறியப்பட்டால், அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.