மாயமான மூதாட்டி
பிணமாக மீட்பு
சென்னிமலை, ஜன. 31-
மகள் வீட்டில் இருந்து மாயமான மூதாட்டி, வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார்.
சென்னிமலை அருகே அர்த்தனாரிபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ், 52, கூலி தொழிலாளி. இவரது தாயார் சுசீலா, 70; உடல் நலம் பாதித்து, ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு மாதமாக சென்னிமலை 1010 காலனியில் மகள் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த, 25ம் தேதி சுசீலா மாயமானார். இதுகுறித்து மகள் கவிதா, சென்னிமலை போலீசில் புகாரளித்தார். இந்நிலையில் அரச்சலுார் அருகே, கீழ்பவானி வாய்க்காலில் சுசீலா சடலம் மிதந்தது. நோய் கொடுமை, வயது மூப்பால் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
தொழிலாளி விபரீத முடிவு
ஈரோடு, ஜன. 31-
ஈரோடு, பெரியதோட்டம், முத்துகுமாரசாமி வீதியை சேர்ந்தவர் விஜய ராகவன், 44; கட்டட தொழிலாளி. இவர் மனைவி வள்ளி. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வேலைக்கு செல்லும் இடங்களில் விஜயராகவன் கடன் பெற்று செலுத்தாமல் இருந்தார். கடனை முறையாக செலுத்தாத நிலையில், குடிப்பழக்கமும் ஏற்பட்டது.
கடந்த, 28ல் மகளுக்கு வரன் பார்க்க, மனைவியுடன் தர்மபுரி சென்று இரவில் வீடு திரும்பினார். இந்நிலையில் அதிகாலையில் விஜயராகவன் விஷ மருந்து குடித்து விட்டார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஜீவா விழா கருத்தரங்கு
சத்தியமங்கலம், ஜன. 31
இந்திய கம்யூ., கட்சி சார்பில், ஜீவா விழா கருத்தரங்கு, சத்தியமங்கலத்தில் நடந்தது. நகர செயலாளர் ஜமேஷ் தலைமை வகித்தார். ஜீவாவின் வாழ்க்கை வரலாறு குறித்து, கவிஞர் ஜீவபாரதி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம், இ.கம்யூ., மூத்த தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் மோகன்குமார், நிர்வாகிகள் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தேர்தல் பணியில்
1,300 ஆசிரியர்கள்
ஈரோடு, ஜன. 31-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணியில், 1,300 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஓட்டுசாவடி மையத்துக்கு நான்கு பேர் வீதம், 952 பேர் இருப்பர். மற்றவர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மூன்று கட்டமாக, ஓட்டுப்பதிவு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்படி பிப்.,6ல் முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் ஒட்டுபதிவன்று எவ்வாறு செயல்பட வேண்டும். மின்னணு ஓட்டுபதிவு கருவிகளை கையாளும் விதம், அவற்றில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதனை சரி செய்யும் வழிமுறை உள்பட பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. 2ம் கட்ட பயிற்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
48 வேட்பு மனுக்கள்
இதுவரை வினியோகம்
ஈரோடு, ஜன. 31-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து வேட்பு மனுக்களை பெறலாம்.
காங்., - அ.தி.மு.க., மற்றும் இந்திய குடியரிமை கட்சி, அனைத்து இந்திய சமுதாய முன்னேற்ற கழகம், தமிழக தாயக முன்னேற்ற கட்சி, விடுதலை களம், தேசிய மக்கள் கழகம், இந்திய திராவிட மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகள், சுயேட்சை வேட்பாளர் என, நேற்று வரை, 48 வேட்பு மனுக்களை பெற்று சென்றுள்ளதாக, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துகிருஷ்ணன் கூறினார்.
'காங்., வேட்பாளர் இளங்கோவன் சார்பில், அவரது வக்கீல் மனுவை பெற்று சென்றார். அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர் பெயர் அறிவிக்காததால், பிரபாகரன் என்பவர் ஒரு மனு பெற்று சென்றுள்ளார்' என்று தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
காங்., கட்சி சார்பில்
யாத்திரை நிறைவு விழா
கோபி, ஜன. 31-
காங்., முன்னாள் தலைவரும், கட்சியின் எம்.பி.,யுமான ராகுலின், பாரத ஒற்றுமை யாத்திரை நிறைவு விழாவை முன்னிட்டு, கோபி நகர காங்., சார்பில், காந்தியின் போட்டோவுக்கு நேற்று மலர் துாவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, கோபியில் நேற்று நடந்தது. தலைவர் மாரிமுத்து, முன்னாள் கவுன்சிலர் முரளி, மூத்த வக்கீல் ரத்தின சபாபதி, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தீண்டாமை ஒழிப்பு
உறுதிமொழி ஏற்பு
ஈரோடு, ஜன. 31-
காந்தியடிகளின் நினைவு நாளான, தியாகிகள் நாளை முன்னிட்டு, டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். அனைத்து துறை அலுவலர், பணியாளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் குமரன், துணை கலெக்டர் (பயிற்சி) காயத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகள் முகாம்
தாராபுரம், ஜன. 31-
தாராபுரத்தில், 18 வயதுக்குட்பட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தாராபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமில், திரளான மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர். கண், காது, எலும்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு, மருத்துவ ஆலோசனை பெற்றனர். முகாமில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நசுருதீன், பாலசுந்தரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாஜி அமைச்சர்
கோவிலில் வழிபாடு
காங்கேயம், ஜன. 31-
அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி, பணம் பெற்றதாக பதிவான வழக்கில் கைதானார். நிபந்தனை ஜாமினில் சிறையில் இருந்து வெளிவந்தார். இதனிடையே நிபந்தனைகளை நீதிமன்றம் தளர்த்திக் கொண்ட நிலையில், சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு, நேற்று வந்தார். மூலவர் சுப்ரமணியரை தரிசனம் செய்த பின், கோவிலை சுற்றி வலம் வந்தார். அவருடன் மொடக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியம் உடன் வந்தார். தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
தாராபுரம், ஜன. 31-
தாராபுரத்தில் தாசில்தார் அலுவலக வளாகத்தில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் கயல்விழி தலைமை வகித்து உறுதிமொழி வாசித்தார். தாசில்தார் ஜெகஜோதி மற்றும் தாலுகா அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள், தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர். தி.மு.க., மகளிரணி நிர்வாகிகள் நேர்காணல்
காங்கேயம், ஜன. 31-
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., மகளிர் மற்றும் மகளிரணி மாவட்ட அமைப்பாளர், மாவட்ட துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராகுல் பாத யாத்திரை நிறைவு
காங்., கட்சியினர் ஊர்வலம்
தாராபுரம், ஜன. 31-
ராகுல் பாதயாத்திரை நிறைவை ஒட்டி, காங்., கட்சியினர் தாராபுரத்தில் நேற்று ஊர்வலமாக சென்றனர்.
தாராபுரம் சர்ச் ரோட்டில் இருந்து புறப்பட்டு, பழைய நகராட்சி அலுவலகம் முன் வந்தடைந்தனர். அங்கு காந்தி சிலைக்கு, மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு மாலை அணிவித்து, தேசியக்கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., காளிமுத்து, நகர காங்., தலைவர் செந்தில்குமார் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.