ஈரோடு, ஜன. 31-
ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 108 வேட்பாளர்களை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்க கூட்டம், நேற்று மாலை ஈரோட்டில் நடந்தது, தலைவர் கைலாசபதி, செயலர் செந்தில், பொருளாளர் சிவராமன் மற்றும் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு டிச.,2ல் பிறப்பித்த உத்தரவுப்படி, 80 அடி திட்ட சாலையை உடனடியாக பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்றதை, உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள, 12.66 ஏக்கர் நிலம், அரசு புறம்போக்கு நிலம் என தீர்ப்பு வழங்கியுள்ளதை அரசு கவனத்தில் கொண்டு, அந்த இடத்தை தாமதமின்றி அரசு மீட்டெடுக்க வேண்டும். 80 அடி திட்ட சாலையை திறப்பது, 12.66 ஏக்கர் நிலத்தை மீட்டெடுப்பது ஆகிய கோரிக்கையை நிறைவேற்ற மக்கள், அரசுக்கு முறையிடும் விதமாக, கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 108 பொதுமக்களை போட்டியிட வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.