ஈரோடு, ஜன. 31-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பழனிசாமி அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவுள்ளார். கடந்த வாரம் இது தொடர்பாக, பழனிசாமி இரண்டு நாட்கள் ஆலோசித்தார். இந்நிலையில் மூன்றாவது முறையாக தொகுதி, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பணிக்குழுவினருடன், பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதற்காக வில்லரசம்பட்டியில் தனியார் ரிசார்ட்டுக்கு மாலை, 6:30 மணிக்கு பழனிசாமி வந்தார். தேர்தல் பணிக்குழு தலைவர் செங்கோட்டையன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் கருப்பணன், வேலுமணி ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகளுடன் சிறிது நேரம் தனி அறையில், பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின் அங்குள்ள மூடிய அரங்கில் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, ஐந்து பகுதி செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள், அப்பகுதி தேர்தல் பணிக்குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இரவு, 10:00 மணியை கடந்தும் ஆலோசனை நீடித்தது. இவ்வளாகத்துக்குள் செய்தியாளர்கள், போட்டோகிராபர்களை அனுமதிக்கவில்லை.