சத்தியமங்கலம், ஜன. 31-
தாளவாடி அருகே கும்கி யானைகளை, டாப்சிலிப்புக்கு கொண்டு செல்ல, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகம் திகினாரை கிராமத்தில், ஒரு மாதமாக கருப்பன் எனும் ஒற்றை யானை, விளை நிலங்களை தின்றும் மிதித்தும், மின் கம்பங்களை உடைத்தும் நாசம் செய்து வருகிறது. விவசாயிகள் கோரிக்கையால், கருப்பனை காட்டுக்குள் விரட்ட, டாப்சிலிப் பகுதியில் இருந்து, மூன்று கும்கி யானைகளை வரவழைத்தனர். ஐந்து முறை மயக்க ஊசி செலுத்தியும், கருப்பன் பிடிபடாததால், விரட்டும் பணியை வனத்துறையினர் தற்காலிகமாக நிறுத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, மூன்று கும்கி யானைகளையும் டாப்சிலிப் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
இதையறிந்த விவசாயிகள், கருப்பன் யானையை வனத்துக்குள் விரட்டிய பிறகே, கும்கிகளை கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி கும்கிகளை அழைத்து செல்லும் முடிவை கண்டித்து, வனத்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சலீம் என்ற கும்கி யானைக்கு, உடல்நிலை சரியில்லை. மேலும், யானை பாகன் பயிற்சிக்காக தாய்லாந்து நாட்டுக்கு செல்கிறார். இதனால் கலீமுடன், மற்ற இரு கும்கிகளான முத்து மற்றும் கபில்தேவ்வை, டாப்சிலிப் பகுதிக்கு அனுப்பி வைக்கிறோம். பிப்., 6ம் தேதிக்கு பிறகு, வேறு மூன்று கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு, கருப்பனை தேடும் பணி தொடரும் என உறுதியளித்தனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.