காஞ்சிபுரம்:கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தமிழக அரசின் மகளிர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாழ்ந்து காட்டுவோம், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் என பல்வேறு திட்டங்கள், மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டத்துக்கான மாவட்ட தலைமை அலுவலகம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்குகிறது.
இந்த அலுவலகத்தில் நிர்வாக ரீதியாக நடக்கும் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வருவதில்லை என மகளிர் சுய உதவிக்குழுவினர் பலர் புலம்புகின்றனர்.
அதேபோல், திட்ட அலுவலகம் முழுதும் தனி நபர் ஆதிக்கத்தின் கீழ் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மகளிர் திட்டங்களில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் வெளியே தெரியாமல், மூடி மறைக்கப்படுவதாகவும், புதிதாக பொறுப்பேற்றுள்ள மகளிர் திட்ட இயக்குனர் கவிதா, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து மகளிர் திட்ட அலுவலக வட்டாரம் கூறியதாவது:
பெண்கள் முன்னேற்றத்துக்காக கொண்டு வரப்பட்ட மகளிர் திட்டங்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்காமலேயே பயிற்சி அளித்ததாக கணக்கு காண்பித்து லட்சக்கணக்கில் சுருட்டியுள்ளனர்.
முறைகேடு சம்பந்தமான கோப்புகள் திட்ட இயக்குனரின் பார்வைக்கு செல்லாமல் அதிகாரிகளே தடுக்கின்றனர். திட்ட இயக்குனருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரிகள் முறைகேடுக்கு துணை போகின்றனர்.
மகளிர் திட்டம் இயங்கும் அலுவலகத்தில் ஐந்து அரசு அலுவலகங்கள் இயங்குகின்றன.
இந்த மொத்த அலுவலகங்களின் பராமரிப்பு செலவுகளும் தனி நபர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. சில ஊழியர்கள் ஒட்டுமொத்த அலுவலகத்தையே கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக நடக்கும் முறைகேடுகளை எந்த உயரதிகாரிகளும் கண்டுகொள்வதாக இல்லை.
மகளிர் திட்டத்தில் முறைகேடாக சம்பாதித்த நபர்கள், ஏராளமான சொத்துக்களை வாங்கிஉள்ளனர்.
லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு துறையினர் விசாரித்தால் முழு உண்மை வெளிவரும். மகளிர் திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட கலெக்டர் இந்த விவகாரத்தில் தீர விசாரித்து நடவடிக்கை எடுத்தால், பல உண்மைகள் வெளிவரும்.
இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவிக்கிறது.