சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு கிராமங்களில், வருவாய்த் துறை வாயிலாக நில எடுப்பு செய்யப்பட்டது.
இதில் ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள பீமந்தாங்கல் கிராமத்தில் நில எடுப்பு செய்ததில், சர்வே எண். 310/1ல், 7.5 ஏக்கர் நிலம், போலியாக பட்டா பெற்று, அதன் மூலம், 33.09 கோடி ரூபாய் மோசடி செய்து, சிலர் இழப்பீடு பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் வெளியே வந்த பின், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், போலி ஆவணங்கள் வாயிலாக இழப்பீடு பெற்றதாக ஆசிஷ்மேத்தா, செல்வம், முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, போலி பட்டா பெற்று நிலம் வைத்திருந்த ஆசிஷ்மேத்தா, செல்வம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை ஏமாற்றி, 33 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,போலீசுக்கு மாற்றி, தமிழக அரசு கடந்த 2021ல் உத்தரவிட்டது.
இந்த மோசடி நடைபெறுவதற்கு, பல்வேறு போலி ஆவணங்களை தயார் செய்ததாக, சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த சரவணன், பாஸ்கரன் ஆகிய இருவரும் இடைத்தரகர்களாக இருந்துள்ளனர் என தமிழக அரசு உத்தரவிலேயே தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் சென்ற பின் வேகமெடுக்கும் எனவும், விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் மெத்தனப் போக்குடன் கையாள்வதாக புகார் எழுந்துள்ளது. வழக்குப்பதிவு செய்து ஒன்றரை ஆண்டுகளான நிலையில், முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா இன்று வரை கைது செய்யப்படவில்லை.
போலீசாரால் தேடப்படும் நபராக இருக்கும்போதே, போலீசார் முன்பு நீதிமன்றத்துக்கு வந்து சென்றிருந்தார்.
முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா மீது சி.பி.சி.ஐ.டி.,போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக வருவாய்த் துறையினர் தெரிவிக்கின்றனர். போலீசார் அவரை விசாரிக்கக் கூட இல்லை என கூறப்படுகிறது.
அதேசமயம், 2021 ஜூலை மாதம் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,போலீசாரிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் வழக்கின் குற்றப்பத்திரிக்கை இன்று வரை தாக்கல் செய்யவில்லை. காலம் தாழ்த்துவதால், இந்த வழக்கு நீர்த்துப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.