திருத்தணி:திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1,600க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் பழுதடைந்த பள்ளிக் கட்டடம் உள்ளது.
மேலும், பள்ளிக் கட்டடத்தை சுற்றியும் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்நிலையில், நேற்று மதியம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவியரின் வகுப்பறை கட்டடம் அருகே, மூன்றரை அடி நீளமுள்ள பச்சைப்பாம்பு வந்து கொண்டிருந்தது.
இதை வகுப்பறை ஆசிரியை ஒருவர் பார்த்துவிட்டு பச்சைப்பாம்பு, பள்ளி வளாகத்தில் புகுந்தது குறித்து தலைமை ஆசிரியை மற்றும் திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு தலைமையிலான வீரர்கள் வந்து அரை மணி நேரத்திற்கு மேல் போராடி, பச்சைப்பாம்பை உயிருடன் பிடித்தனர்.
பின், அந்த பாம்பை, திருத்தணி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர், திருத்தணி அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் உயிருடன் விட்டனர்.