திருச்சி:முருங்கப்பட்டி வெடி விபத்தில், 19 பேர் பலியானதில், தொழிற்சாலை உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய, திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் அருகே உள்ள டி.முருங்கப்பட்டியில் வெற்றிவேல் வெடிமருந்து தொழிற்சாலை இயங்குகிறது.
தொழிற்சாலைக்கு 'சீல்'
ராணுவத்துக்கு பயன்படும், 'கன் பவுடர்' இங்கு தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த தொழிற்சாலையில், 2016ல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் பணியாற்றிய, 19 தொழிலாளர்கள் அடையாளம் காண முடியாத வகையில், உடல் சிதறி பலியாகினர். இதையடுத்து, தொழிற்சாலைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.
நாடு முழுதும் பேசப்பட்ட இந்த வெடி விபத்து வழக்கை, உப்பிலியாபுரம் போலீசார் முதலில் விசாரித்தனர். பின், திருச்சி சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.
அந்த வெடி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் விஜய் கண்ணன், தொழிற்சாலை நிர்வாக அதிகாரிகள் பிரகாசம், ஆனந்த், ராஜகோபால் ஆகியோர் மீது, திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே, வெடி மருந்து தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டு, தற்போது செயல்படுகிறது.
உத்தரவு
வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, விஜய் கண்ணன் உட்பட நால்வரும், நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்து, நேற்று முன்தினம் நீதிபதி செல்வ முத்துக்குமாரி தீர்ப்பளித்தார்.
வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய நால்வரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், விஜய கண்ணன் உள்ளிட்ட நால்வர் மீதும் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை, மார்ச், 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று, நான்கு பேரும் ஆஜராக உத்தரவிட்டார்.