கோவை:''குட்கா, பான்பராக் விற்பனையை தடுக்க தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன் கூறினார்.
கோவையில்அவர் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பினாலே, அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும். அதன் ஒரு பகுதியாக, 4,308 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, துறை வாரியாக பணிகள் நடந்து வருகின்றன.
தேவைக்கேற்ப டாக்டர்கள், நர்ஸ்கள் நியமனம் நடக்கும். குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது.
நீதிமன்றம் விலக்கு அளித்திருந்தாலும், மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் புகையிலை பொருட்கள் விற்பதை தவிர்க்கலாம். சட்ட பூர்வமாக உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து மேல்முறையீடு செய்ய, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
விரைவில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும். மேலும், உயர்நீதிமன்றம் இச்சட்டத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து கூறியுள்ளது. கடந்த, 2013ம் ஆண்டு முதல் நீட்டிக்கப்பட்டு வரும் இச்சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகள், வரும் சட்டசபை கூட்டத்தில் மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால், புதிய சட்டம் இயற்றவும் சட்டசபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி அளிப்பது மட்டுமின்றி, அரசு சாரா தொண்டு நிறுவனங்களால், ஆரோக்கியமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரும், 2025ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் இலக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.