ஆரணி:ஆரணி அருகே, விவசாயியை கொலை செய்து கிணற்றில் வீசிய ஆறு பேருக்கு, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தச்சூரைச் சேர்ந்தவர் சுந்தர், 50; இவர், 2013, ஜன., 13ல், விவசாய கிணற்றில், 'பவர் டில்லர்' எனும் விவசாய இயந்திரத்துடன் சடலமாக கிடந்தார். ஆரணி தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அப்பகுதியைச் சேர்ந்த விநாயகத்தின் மகன்கள், சேட்டு, 66, நேரு, 65, உள்ளிட்ட ஆறு பேரும் சேர்ந்து, சுந்தரை கொலை செய்து, பவர் டில்லருடன் கிணற்றில் வீசியது தெரிந்தது.
இதையடுத்து, ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு, ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா, ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா, 3,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
தீர்ப்பின் போது, வெங்கடேசன் ஆஜராகாததால், அவருக்கு, 'பிடிவாரன்ட்' பிறப்பித்து கைது செய்ய உத்தரவிட்டார்.