ஈரோடு:ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. இதில், வித விதமான 'கெட் - அப்'களில் வந்த சுயேட்சைகள் நான்கு பேர் மனு தாக்கல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான மனு தாக்கல், மாநகராட்சி ஆணையர் அறையில் துவங்கியது.
தீவிர பரிசோதனை
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் சிவகுமார் மனுவை பெற்றார். இதனால் மாநகராட்சி நுழைவாயிலில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மனு தாக்கல் காலை 11:00 மணிக்கு துவங்கினாலும், 10:00 மணிக்கே விதவிதமான ஆடைகள், கெட் - அப்களுடன் பலர் மனு தாக்கல் செய்ய வந்தனர். தீவிர பரிசோதனைக்கு பின் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த, 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், 65, முதல் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இவர், வாகனங்களுக்கு, 'பஞ்சர்' ஒட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், 233வது முறையாக நேற்று மனு தாக்கல் செய்தார். தேர்தல் செலவாக இதுவரை, 1 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளாராம்.
இவரை தொடர்ந்து, கோவை, சுந்தராபுரத்தைச் சேர்ந்த சுய தொழில் செய்து வரும் நுார் முகம்மது, 63, செருப்பு மாலை அணிந்து வந்தார்.
ஓட்டை விற்க கூடாது
'மக்கள் காசுக்காக ஓட்டை விற்கக்கூடாது; விலை போகக்கூடாது. நல்லவரை பார்த்து ஓட்டுப்போட வேண்டும்' என வலியுறுத்தி, மனு செய்தார். இது இவருக்கு, 41வது வேட்பு மனு.
நாமக்கல், மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ், 42; காந்தி போல உடையணிந்து தராசுடன் வந்து மனுதாக்கல் செய்தார்.
இவர், 10 ரூபாய் நாணயமாக, 10 ஆயிரம் ரூபாய் கொண்டு வந்து 'டிபாசிட்' கட்டணம் செலுத்தினார். இது இவருக்கு, 10வது வேட்பு மனு.
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே தேவராயன்பாளையத்தைச் சேர்ந்த தனலட்சுமி, 41, மனு தாக்கல் செய்தார்.
மதியம், 3:00 மணிக்கு மனுத்தாக்கல் நிறைவடைந்தபோது, நான்கு சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர்.