சேலம்:மாமியாருக்கு பரிகார பூஜை நடத்திய போது, மருமகனை தாக்கி, 7 லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற ரவுடி கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம், அசாத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 47, வ.உ.சி., மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்கிறார். இவரது மாமியார் சாரதா, 70. வீராணத்தில் வசிக்கும் இவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதற்காக, ஜன., 20, இரவு, 7:00 மணிமுதல், 9:00 மணி வரை, மாமியார் வீடு உள்ள வீராணத்தில், காலி நிலத்தில் பரிகார பூஜை செய்தனர். இரண்டாம் கட்ட பூஜையை, கடந்த, 27, இரவு, 8:00 மணிக்கு செய்தனர்.
அப்போது, அங்கு வந்த காரிப்பட்டியைச் சேர்ந்த ரவுடி பிரபு, இளவரசன், சதீஷ், தினேஷ், மனோகரன், செந்தில் ஆகியோர், பரிகார பூஜை செய்த செந்தில்குமார் உட்பட ஆறு பேரை தாக்கி, அவர்கள் வைத்திருந்த, 7 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றனர்.
காயமடைந்த செந்தில்குமார், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணப்பறிப்பில் ஈடுபட்ட கும்பலை தேடுகின்றனர்.