திருப்பூர்:நகரின் பல இடங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் சப்ளை பாதிப்பு, குழாய் உடைப்பு ஆகிய பிரச்னைகள் எங்களை துாங்க விடாமல் செய்கிறது, என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.
திருப்பூர் மாநகராட்சி மன்ற கவுன்சிலர்கள் கூட்டம், மேயர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தனர்.
கூட்ட விவாத தொகுப்பு:
அன்பகம் திருப்பதி (அ.தி.மு.க.,):
நான்காவது குடிநீர் திட்டத்தில் இணைப்பு வழங்க 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை, ஆட்களுக்கு ஏற்றவாறு இஷ்டம் போல் வசூலிக்கின்றனர். குழாய் இணைப்பு குறித்த தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும். அதிக கட்டணம் கேட்பதால் பலரும் இணைப்பு பெற தயங்கி, வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
ராஜேந்திரன் (இ.கம்யூ.,):
ஸ்மார்ட் சிட்டி பணிகள் நிலை குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. அப்பணி முழுவதும் மர்மமாகவே உள்ளது. யாருமே தகவல் தருவதில்லை. நிறைவுற்ற பணிகள் பல இடங்களில் குறைபாடுகளுடன் உள்ளது. குப்பை லாரிகள் பாதுகாப்பாக இயக்கப்படுவதில்லை.
கண்ணப்பன் (அ.தி.மு.க.,):
பழைய பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடம் முறையாக அமைக்கவில்லை. பஸ் ஸ்டாண்ட் உட்புறம் கடைகள் ஆக்கிரமிப்புள்ளது. வெளி வளாகத்தில் தள்ளு வண்டி கடைகள் உள்ளன. அதற்கு சிலர் மாமூல் வசூலிக்கின்றனர். அதிகாரிகளை மிரட்டும் அளவுக்கு யார் அவர்களுக்கு அதிகாரம் அளித்தது. (இப்புகாரை கூறிய கண்ணப்பன், அதற்கான போட்டோ ஆதாரங்களை மேயர், கமிஷனர் ஆகியோரிடம் அளித்தார்)
ரவிச்சந்திரன்
(இ.கம்யூ.,):
ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயித்து வழங்க வேண்டும். குழாய் உடைப்புகளால் வீடுகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. ரோடுகளில் அதிகம் செல்கிறது. ரோடு பணியால் நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்க வேண்டும்.
செல்வராஜ் (இ.கம்யூ.,):
முதலாம் மண்டலத்தில் உள்ள வார்டுகளுக்கு மூன்று குடிநீர் சப்ளையாகிறது. ஒரே குடிநீர் கட்டணம் வசூலித்து குறைவான குடிநீர் ஏன் வழங்க வேண்டும். குடிநீர் சப்ளையில் உள்ள குளறுபடியைச் சரி செய்ய வேண்டும்.
தமிழ்செல்வி
(அ.தி.மு.க.,):
16வது வார்டில் 2,500 வீடுகள், 10 ஆயிரம் பேர் வசிக்கும் பகுதியில் கழிவு நீர் கால்வாய் வசதியில்லை.
கோமதி (தி.மு.க.,) :
திருப்பூருக்கே குடிநீர் வழங்கிய கோவில்வழி பகுதிக்கு தற்போது குடிநீர் வருவதேயில்லை. எங்களை துாங்க விடாமல் இப்பிரச்னை நீடிக்கிறது.
மேயர் தினேஷ்குமார் :
குழாய் இணைப்புக்கான கட்டண விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும். ரோடு பணிகள் குறித்து அதை துவங்கும் நாளிலேயே விவரம் அடங்கிய அறிவிப்பு வைக்கப்படும். அனுமதியற்ற கட்டடங்கள் குறித்த விவகாரத்தில், கடந்த 2 ஆண்டுகளில் தற்காலிக மின் இணைப்பு பெற்ற கட்டடங்கள் விவரம் பெற்று அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
நகரப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குழாய் உடைப்பு உள்ளது. இது குறித்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில், அனைத்து உடைப்புகளும் சரி செய்யப்படும்.
பஸ் ஸ்டாண்ட் தள்ளுவண்டி விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திடக்கழிவு மேலாண்மையில் மின்சாரம், எரிவாயு மற்றும் நுண்ணுயிர் உரம் ஆகிய உற்பத்தி மூலம் படிப்படியாக தீர்வு காணப்படும். 4வது குடிநீர் திட்டத்தில் முதல் கட்டமாக வடக்கு பகுதியில் 13 தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.