திருப்பூர்;மங்கலம் ரோடு விரிவாக்கத்துக்கு, இருபுறமும் நிலம் கையகப்படுத்தவேண்டும்; இதுகுறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என, பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் - மங்கலம் ரோடு விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ரோடு விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துதல் குறித்த கூட்டம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கடந்த ஜன. 30ம் தேதி நடைபெற்றது.
ரோட்டின் ஒருபுறம் மட்டும் நிலம் கையகப்படுத்துவதற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து மங்கலம் ரோடு பகுதி நில உரிமையாளர்கள் திரண்டுவந்து, கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது:
நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்தப்பட்ட கூட்டத்தில், மங்கலம் ரோடு விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்துதல், அதற்கான இழப்பீடு குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். 'ரோட்டின் ஒருபுறம் மட்டும் நிலம் கையகப்படுத்துவதால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தவேண்டும்,' எனவும் கருத்து தெரிவித்தோம்.
ரோடு விரிவாக்கம் தவிர்க்க முடியாது எனில், இருபுறமும் சம அளவில் நிலம் கையகப்படுத்தவேண்டும். இதற்கான ஆலோசனை கூட்டம், கலெக்டர் தலைமையில் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.