பழநி:பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முதல்நாளில் கருவறைக்குள் முக்கிய பிரமுகர்கள் சென்றதால், ஆனி மாதத்தில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பழநி அர்ச்சகர் ஸ்தானிக சங்க தலைவர் பேசுவது போன்ற ஆடியோ பரவி வருகிறது .
பழநி மலை முருகன் கோயிலில் ஜன.27 ல் கும்பாபிஷேகம் நடந்தது. ஜன. 26 ல் கோயில் கருவறைக்குள் சிலர் சென்றதாக புகார்கள் எழுந்தன. வீடியோவும் பரவியது.
இந்நிலையில் இது தொடர்பாக ஆடியோ ஒன்று பரவி வருகிறது.
அதில் பேசும் நபர், ''கருவறைக்குள் யாரும் செல்லக்கூடாது என கூறினேன். ஆனால் சங்க தலைவரான நான் சொல்வதை கேட்காமல் அதிகாரிகள் அனைவரும் உள்ளே சென்றனர்.
இதற்கு நம்முடன் இருப்பவர்கள் அனுமதி அளித்தது தவறு. இதனால் நமக்கு கெட்ட பெயர். நம் முன்னோர்கள் செய்ததை காப்பாற்ற வேண்டும்.
பழநியாண்டவருக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பணம் சம்பாதிக்கும் எண்ணத்தை விடுத்து கெட்ட பேரை சம்பாதிக்காமல் இருக்க வேண்டும். சங்கத்தில் கூட்டம் நடத்தி ஆனி மாதத்தில் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய அனைவரும் முடிவெடுக்க வேண்டும்.
அதனை தீர்மானமாக அறிவித்து கோயில் அலுவலரிடம் தெரிவிப்போம். அனைவரும் நலமுடன் இருப்போம்,'' இவ்வாறு பேசி உள்ளார்.
இது குறித்து பழநி கோயில் அர்ச்சகர் ஸ்தானிக சங்க தலைவரான கும்பேஸ்வரரை நேரிலும் சந்திக்க முடியவில்லை. அலைபேசியிலும் தொடர்புகொள்ள முடியவில்லை.