சிவகங்கை:சிவகங்கையில் எம்.பி.பி.எஸ்., மாணவர்களின் உடற்கூறு பரிசோதனை படிப்பிற்காக அமராவதிபுதுாரை சேர்ந்த வி.தமயந்தியின் 65, உடல் தானமாக வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதுார் தமிழாசிரியர் ஆர்எம்., வள்ளியப்பன் மனைவி வி.தமயந்தி 65. இவர்களது மகள் தமிழரசி, சிங்கப்பூர் இந்தியன் வங்கியில் அதிகாரியாக உள்ளார். மகன் வி.ராமச்சந்திரன் அழகப்பா பல்கலையில் பணிபுரிகிறார்.
2021 ம் ஆண்டு டிச., 7ம் தேதி தமயந்தி தனது உடலை சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரிக்கு தானமாக தருவதாக எழுதி கொடுத்திருந்தார்.
அமராவதிபுதுாரில் உள்ள தனது வீட்டில் இயற்கை மரணம் அடைந்தார். இதையடுத்து தமயந்தியின் மகள், மகன் இருவரும் தாயின் உடலை ஒப்படைத்தனர். கண்களை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கினர். உடல் தானம் பெற்றதற்கான சான்றிதழை தமிழரசி, ராமசந்திரனிடம் மருத்துவ கல்லுாரி டீன் ரேவதி பாலன் வழங்கினார்.
உடல் தானத்திற்கு 145 பேர் விருப்பம்
மருத்துவக்கல்லுாரி உடற்கூறு துறை தலைவர் பி.ஜி., ஆனந்தி கூறியதாவது:
இதுவரை உடலை தானமாக வழங்குவதாக 145 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். தமயந்தியின் உடல் எம்.பி.பி.எஸ்., மாணவர்களின் செய்முறை பயிற்சிக்கு பயன்படுத்தப்படும். இது போன்று மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக உடலை தானமாக வழங்க முன்வரவேண்டும், என்றார்.