தேனி:தேனி சமதர்மபுரத்தில் போதையில் இரும்பு கம்பியால் பெரியப்பா பெத்துராஜூவை கொலை செய்து, விடிய விடிய பிணத்துடன் உறங்கிய கனகவேல் ஐயப்பனுக்கு 31, நீதிமன்றம் ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தேனி சமதர்மபுரம் முத்துமாரியம்மன் கோயில் தெரு பெத்துராஜ் 80. மனைவி சின்னத்தாய் 75. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். சின்னத்தாய்க்கு பார்வை குறைபாடு ஏற்பட அருகில் உள்ள வீட்டில் வசித்தார். தனியாக இருந்த பெத்துராஜ் தனது தம்பி மகன் சிவகண்ணமூர்த்தி வீட்டின் மாடியில் தங்கினார். அங்கு பெற்றோரை இழந்து ஆதரவற்று இருந்த கனகவேல் ஐயப்பன் 34, தங்கியிருந்தார். இவர், வேலைக்கு செல்லாமல் போதைக்கு அடிமையாகி, அடிக்கடி பெத்துராஜூடம் தகராறில் ஈடுபட்டார்.
2019 டிசம்பர் 18 ல் வீட்டிற்கு வந்த கனகவேல்ஐயப்பனை 'தினமும் ஏன் குடிக்கிறாய் ' என பெத்துராஜ் கண்டித்தார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் கனகவேல் ஐயப்பன் இரும்புகம்பியால் பெத்துராஜ் கழுத்தில் குத்தியதில் பலத்த காயமடைந்து கீழே விழுந்தார். மது போதையில் நடந்ததை அறியாமல் கனகவேல்ஐயப்பன், பிணமான பெத்துராஜின் அருகிலேயே படுத்து உறங்கினார்.
அதிகாலையில் எழுந்தவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெரியப்பாவை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பரிசோதித்த போது அவர் இறந்தது தெரிந்தது. உடனே கனகவேல்ஐயப்பன் தேனி போலீஸ் ஸ்டேஷன் சென்று நடந்ததை கூறினார். போலீசார், 'நீயா கொலை செய்தாய். காமெடி பண்ணாதே' எனக்கூறி திருப்பி அனுப்பினர்.
சிறிது நேரத்தில் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் சென்ற கனகவேல், 'சட்டையில் ரத்தக்கறையைப் பாருங்கள்' என காட்டினார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கனகவேல் ஐயப்பனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞராக பாஸ்கரன் ஆஜரானார்.