திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சி முன் தி.மு.க.,வினர் நேற்று இரண்டாவது நாளாக கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். மாநகராட்சி கமிஷனர் கட்சியிரை வெளியேற்றினார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 ல் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் கவுன்சிலர்களாக உள்ளனர். மாநகராட்சியில் டிரைவர்கள் உட்பட பணியிட நியமனத்திற்கு தலா ரூ .2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கடந்த மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் விவாதம் ஏற்பட்டது.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தி.மு.க., கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தி.மு.க.,மேயர் சரவணன் மழுப்பலான பதில் அளித்தார். இதனால் அவருக்கு எதிராக தி.மு.க., கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக சரமாரியாக கேள்வி எழுப்பினர். தி.மு.க., மாநகர செயலாளர் சுப்பிரமணியன், பகுதி செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தினமும் மேயர் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு கமிஷன் கேட்பதாக தி.மு.க.கவுன்சிலர் ரவீந்தர் புகார் தெரிவித்தார். இதனால் மேயர் எதிர்ப்பு, ஆதரவு கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் நடந்தது. வழக்கத்துக்கு மாறாக நேற்று மேயர் வரவில்லை.
கமிஷனரிடம் மனு கொடுத்துவிட்டு சென்ற தி.மு.க, மாநகர செயலாளர், பகுதி செயலாளர் ஆகியோரிடம் தி.மு.க. கவுன்சிலர் மாரியப்பன், துணை மேயர் ராஜு உள்ளிட்டோர் 'மக்கள் பிரச்னைகளை கொண்டு செல்ல தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளனர்.
நீங்கள் ஏன் அரசியல் செய்கிறீர்கள் 'என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து மாடியில் இருந்து இறங்கி வந்த கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து போகச்செய்தார்.
இம்மாநகராட்சியில் தி.மு.க., வினரிடையே மோதல் தொடர்வது பொதுமக்களிடம் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.